Saturday, 7 June 2014

இறவாக் கவிஞர் இன்புற்று வாழ்க

அறிவு என்பது இயற்கையின் அருங்கொடை. அறிவானது மண்ணில் ஊறும் நீரூக்கொப்பானது. பட்டப்படிப்புகள், புத்தகவாசிப்புகள்  போன்றவற்றின்  பணி மண்ணை தோண்டும் மண்வெட்டியின் பணியை ஒத்ததே. தோண்டுவதால் மட்டும் நீர் வருவதில்லை. மண்ணில் நீரூற்று இருந்தால் மட்டுமே நீர் சுரத்தல் சாத்தியம். இதனால் தான் பாலை நிலத்தில் பலநூறு அடிகள் தோண்டியும் நீர் சுரப்பதில்லை. இது புரியா இக்கால மாந்தர்கள் பட்டப்படிப்புகளில் அறிவை மதிப்பிடுவது அறிவீனம். எனது தந்தையார் கவிஞர் குகதாசன் அவர்கள் இயற்கையாகவே இறைவன் திருவருளால் தமிழறிவு கைவரப்பெற்றவர். "என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே" என்ற திருமூலரின் கூற்றுக்கிணங்க இறைவனை சொற்றமிழால் பாடி வருபவர். கவிஞர்கள் என்றாலே புதுக்கவிஞர்கள் என்றாகிப்போன இன்றைய ஈழத்து தமிழ் சமூகத்தில் குறிஞ்சி மலரெனப் பூத்த மரபுக்கவிஞர்.

எனது தந்தையார்  தனது தொழில் மற்றும் எழுத்துப்பணியின் சுமைகள் காரணமாக சிறுவயது முதல் என்னிடம் அளவளாவுவதற்கு நேரம் ஒதுக்க முடிந்ததில்லை. நானும் என் தந்தையாரும் இதுவரை ஒருமுறையேனும் தமிழ், சமயத்தை பற்றி ஆற அமர உரையாடியிருக்காத போதிலும்  என்னுள் இயற்கையாகவே எழுந்த தமிழ் மற்றும் ஆன்மீக பற்றுக்கு அவரின் அருகாமையை விட வேறேதும் காரணம் அறிகிலேன். 

தமிழிலே  எழுந்த திருக்குறள், சிலப்பதிகாரம் போன்ற நூல்களை பற்றி எழுதும் விமர்சனங்களில் “இறவாப் படைப்பு” என்ற சொல்லாடல் பயன்படுத்தப்பட்டிருக்கும். ஒரு படைப்பானது அது எழுதப்பட்ட காலத்தையும் தாண்டி எக்காலமும் பயன்தரக் கூடியதாகவும் பொருந்துவனவாகவும் இருந்தால் அப்படைப்பையே இறவாப் படைப்பென்பர். அவ்வாறு என் தந்தையாரின் கவிதா நூல்களும் காலத்தை கடந்த இறவாப் படைப்பாக  புகழ் பெற வேண்டும் என்பதே என் பேரவா. 

தமிழர் வரலாற்றை உற்று நோக்கின் பண்டைய தமிழ் சமூகமும் மன்னர்களும் புலவர்களைப் பெருமதிப்பளித்து போற்றியே வந்துள்ளனர் என்பது கண்கூடு. ஆயிரம் ஆண்டு உயிர் வாழ அதியமான் ஔவைக்கு நெல்லிக்கனி கொடுத்ததும், புலவருக்காக குமணன் தன் தலையையே கொடுத்ததும், தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையின் முரசுக்கட்டிலில் களைப்பால் உறங்கிய சங்கப்புலவர் மோசிகீரனை தண்டியாது அரசனே வெண்சாமரம் வீசிய  சம்பவங்களும் இதற்கு சான்று பகிர்கிறது. ஆனால் இன்றைய  நிலைமையோ  தலைகீழாக இருக்கிறது.   

இன்றைய நவீனயுகத்தின் பாதிப்புகளால் தமிழ் சமூகத்தினர்  தங்களது வேர்களையும் பண்பாடுகளையும் மறக்கத் தொடக்கிவிட்டனர் என்பதே கசப்பான உண்மை. தனது மொழியையும் பண்பாடுகளையும் புறந்தள்ளிய இனங்கள் வரலாற்றில் பின்னடவையே சந்தித்துள்ளன. இத்தகைய பின்னணியில் எனது தந்தையார் போல் இயற்கையாகவே மரபுக்கவிதை எழுதும் திறன் வாய்த்த ஒருவர் பக்தி இலக்கியம் என்ற வட்டத்தினுள் தன்னை மட்டுப்படுத்திக் கொண்டது வருத்தத்துக்குரியது. தந்தையார்  பக்தி இலக்கியங்களோடு மட்டும் நிறுத்திவிடாமல் தமிழரின் தொன்மையான நாகரீகம், நற்பண்புகள் மற்றும் வரலாற்று பெருமைகளையும் எடுத்தியம்பும் கவிதைகளும் சமூக இலக்கியங்களும் வடிக்கவேண்டும் என்பதே எனது வேண்டுகோள். எதிர்காலத்தில்  அவர் மென்மேலும் சுந்தரத்தமிழில் அழியாக் கவிதைகள் புனையவும், தன் சுயம் தேடி தன்னுள்ளே பயணப்பட்டு தன்னை உணர்ந்து இனியொரு பிறப்பில்லாப் பெருவாழ்வு எய்தவும் எல்லாம் வல்ல இறை அவருக்கு அருள் புரிவாராக.         

இளைய இளவல்
குகதாசன் குமரன்