Friday, 13 March 2015

வரலாற்றுப் பணி

                    

வரலாற்றுக்குள்ளே தேடு!
அங்கே சிறைப்பட்டுக் கிடக்கும் உண்மைகளை 
விடுதலை செய்!
விடுதலை செய்யப்பட்ட உண்மைகள் 
உன்னை விடுதலை செய்யும்!
 – தோழர் பொன்னீலன்

இன்றைய நவீன யுகத்தில் ஒரு இனக்குழுமத்தின் சமகால வாழ்வியலை பதிவு செய்வதற்கும் தங்கள் சமூகம் சார் தொன்மங்களை நிறுவி  தம்மண் மீதான தம் மக்களின் உரிமைகளை பறைசாற்றுவதற்கும் அச்சமூகம் சார் திரைப்படங்கள் அளிக்கும் பங்களிப்பு இன்றியமையாதது. இலங்கையில் வாழும் இரண்டு தேசிய இனங்களில், சிங்களச் சகோதரர்கள் தங்கள் சமகாலத் திரைப்படங்கள் மூலமும் விஜயகுவேனி, துட்டகெமுனு  போன்ற வரலாற்றுத்  தொன்மங்கள்  சார் திரைப்படங்கள் மூலமும்  தங்கள்  சமகால வரலாற்றையும் மண் மீதான தங்கள் வரலாற்று உரிமையையும் பதிவு செய்கின்றனர்.

மற்றைய தேசிய இனமான ஈழத்தமிழர்களின் சமகால வரலாறு என்பது கடும் வலிகளும் ஒடுக்குமுறைகளும் நிறைந்த ஒன்று. ஈழத்தமிழர்களின் வலிகளை பேசக் கூடிய சமகாலப் படைப்புகளையோ, அல்லது அவர்களது உண்மையான  வரலாற்று பெருமைகளை பேசக்கூடிய தொன்மங்களையோ, எடுக்குமளவுக்கான ஒரு ஜனநாயகவெளி இலங்கையில் தற்போதும் இல்லை. தமிழகத்திலும் ஈழத்தமிழர்களின்  சமகால வலிகளை பேசும் படைப்புகளை எடுக்கக்கூடிய வெளி இல்லை என்பதையே தொடர்ந்து ஈழத்தமிழர்களின்  சமகால வரலாறுசார் படங்களுக்கு மறுக்கப்படும் தணிக்கை சான்றிதழ்கள் உணர்த்துகிறது. எனவே ஈழத்தமிழர்கள் தமிழகத்தில் தங்கள் தொன்மங்கள் சார் திரைப்படங்கள் மூலம் தான் தங்கள் வரலாற்றை நிறுவி தம்மண் மீதான தம் மக்களின் உரித்தை பதிவு செய்ய முடியும்.  கதைக்கு எந்த விதத் தேவையும் இல்லாமல் வெறும் வியாபார நோக்கத்துக்காக ஈழத்தமிழர்களை பயன்படுத்தும் தமிழக திரையுலகமும் முன்னணி நடிகர்களும் இந்த வரலாற்றுக் கடமையை ஏற்க முன் வருவார்களா ?

குறிப்பாக எல்லாளளின்  உண்மையான வரலாறு என்பது  திட்டமிட்டு மறைக்கப்பட்ட தமிழ்த் தேசிய இனத்தின் வரலாறு.  வடவிலங்கையில் கோலோச்சி தம் படைத்திறம் மூலம் அனுராதபுரத்தை வெற்றிகொண்ட சேனன் மற்றும் குத்திகனை குதிரை வியாபாரிகளாகவும்  சேனனின் மகன் எல்லாளனை  சோழ இளவரசனாகவும் சித்தரிப்பதன் மூலம் தொல்பழங்காலம் முதல் இலங்கையின் வடபுலத்தில் வலுவான தமிழரசொன்று நிலவியது என்பதை திரையிடவும், தமிழர்கள் மண்ணின் பூர்வக்குடிகள் என்பதை மறைத்து தொடர்ந்து தமிழர்களை தென்னிந்தியாவில் இருந்து  வந்த ஆக்கிரமிப்பாளர்களாகவும் வந்தேறிகளாகவும் சித்தரித்து காட்டும் முயற்சிகளை தகர்த்து எறியவும் இது போன்ற திரைப்பட முயற்சிகள் உதவும்.

Thursday, 12 February 2015

தமிழ் எழுத்தாளுமைகள்


தமிழில் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளுமைகளில் முதலிடம் பிடிப்பவர்கள்  எஸ்.ராமகிருஷ்ணனும் ஜெயமோகனும். இருவரும் தனித் தமிழில் வடமொழி உட்பட எந்தவொரு பிறமொழிக் கலப்புமின்றி எழுதக்கூடியவர்கள். இன்று தங்களை தமிழ் எழுத்தாளர்கள் என்று  கூறிக்கொண்டு ஹன்சிகா பேசும் தமிழில் எழுதிவரும் வெகுஜன எழுத்தாளர்கள் இவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியவை ஏராளம்.  தமிழ்த் தொ(ல்)லைக்காட்சிகளை தமிங்கிலம் முற்று முழுதாக ஆக்கிரமித்து அன்றாட தமிழ்ப் பேச்சு வழக்கில் நாம் பயன்படுத்திய பல நற்தமிழ்ச் சொற்களை இளைய தலைமுறை மத்தியில்  அற்றுப்போக வைத்துள்ள  நிலையில், வாசிக்கும் பழக்கம் உள்ள  சிறுபான்மையினரிடமாவது பைந்தமிழ்ச் சொற்களை கொண்டு சேர்க்க வேண்டியது எழுத்தாளர்களின் தலையாய கடமை என்பது என் எண்ணம்.  அப்பணியை இவ்விருவரும் செவ்வனே செய்துவருகிறார்கள்.

எஸ்ராவின் எழுத்துக்களுக்கும் ஜெமோவின் எழுத்துக்களுக்கும் இடையில் அடிப்படை வேறுபாடு உண்டு. எஸ்ராவின் எழுத்துக்களில் பெரும்பான்மையானவை மண்வாசனையையும் பாமரர்களின் வாழ்க்கையையும் பேசும் எழுத்துக்கள். தமிழர்கள் தொலைத்த பண்பாட்டை, வாழ்க்கை முறையை, கடைக்கோடி மனிதர்களின் எண்ணவோட்டம் மற்றும் வாழ்வியலை சிலாகிக்கும் எழுத்துக்கள். ஆனால் ஜெமோவின் எழுத்துகளில் அடிப்படையான மனிதஅறம் மற்றும் ஆன்மீகம் சார்ந்த கேள்விகளும், தேடல்களும் குழப்பங்களும் இருக்கும். உங்களை உங்களுக்கே அடையாளம் காட்டும் பேரிலக்கிய நீட்சியாகக் கூடிய எழுத்துக்கள் அவை. அவர் எழுத்துக்கள் ரஷ்ய எழுத்தாளர் தால்ச்தோய் எழுத்துக்களோடு ஒப்பிடக்கூடியவை. தால்ச்தோய் எழுத்துக்களில் கிடைக்கும் ஞானத்தின் ஒளி ஜெமோவின் எழுத்துக்களிலும்  அவ்வப்போது கிடைப்பதுண்டு.  எதிர்காலத் தமிழிலக்கிய  உலகில்  இவ்விருவர் இடங்களும் இட்டு நிரப்ப முடியாதவையாகவே இருக்கும் என்பது திண்ணம்.