தமிழில் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளுமைகளில் முதலிடம் பிடிப்பவர்கள் எஸ்.ராமகிருஷ்ணனும் ஜெயமோகனும். இருவரும் தனித் தமிழில் வடமொழி உட்பட எந்தவொரு பிறமொழிக் கலப்புமின்றி எழுதக்கூடியவர்கள். இன்று தங்களை தமிழ் எழுத்தாளர்கள் என்று கூறிக்கொண்டு ஹன்சிகா பேசும் தமிழில் எழுதிவரும் வெகுஜன எழுத்தாளர்கள் இவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியவை ஏராளம். தமிழ்த் தொ(ல்)லைக்காட்சிகளை தமிங்கிலம் முற்று முழுதாக ஆக்கிரமித்து அன்றாட தமிழ்ப் பேச்சு வழக்கில் நாம் பயன்படுத்திய பல நற்தமிழ்ச் சொற்களை இளைய தலைமுறை மத்தியில் அற்றுப்போக வைத்துள்ள நிலையில், வாசிக்கும் பழக்கம் உள்ள சிறுபான்மையினரிடமாவது பைந்தமிழ்ச் சொற்களை கொண்டு சேர்க்க வேண்டியது எழுத்தாளர்களின் தலையாய கடமை என்பது என் எண்ணம். அப்பணியை இவ்விருவரும் செவ்வனே செய்துவருகிறார்கள்.
எஸ்ராவின் எழுத்துக்களுக்கும் ஜெமோவின் எழுத்துக்களுக்கும் இடையில் அடிப்படை வேறுபாடு உண்டு. எஸ்ராவின் எழுத்துக்களில் பெரும்பான்மையானவை மண்வாசனையையும் பாமரர்களின் வாழ்க்கையையும் பேசும் எழுத்துக்கள். தமிழர்கள் தொலைத்த பண்பாட்டை, வாழ்க்கை முறையை, கடைக்கோடி மனிதர்களின் எண்ணவோட்டம் மற்றும் வாழ்வியலை சிலாகிக்கும் எழுத்துக்கள். ஆனால் ஜெமோவின் எழுத்துகளில் அடிப்படையான மனிதஅறம் மற்றும் ஆன்மீகம் சார்ந்த கேள்விகளும், தேடல்களும் குழப்பங்களும் இருக்கும். உங்களை உங்களுக்கே அடையாளம் காட்டும் பேரிலக்கிய நீட்சியாகக் கூடிய எழுத்துக்கள் அவை. அவர் எழுத்துக்கள் ரஷ்ய எழுத்தாளர் தால்ச்தோய் எழுத்துக்களோடு ஒப்பிடக்கூடியவை. தால்ச்தோய் எழுத்துக்களில் கிடைக்கும் ஞானத்தின் ஒளி ஜெமோவின் எழுத்துக்களிலும் அவ்வப்போது கிடைப்பதுண்டு. எதிர்காலத் தமிழிலக்கிய உலகில் இவ்விருவர் இடங்களும் இட்டு நிரப்ப முடியாதவையாகவே இருக்கும் என்பது திண்ணம்.