வரலாற்றுக்குள்ளே தேடு!
அங்கே சிறைப்பட்டுக் கிடக்கும் உண்மைகளை
விடுதலை செய்!
விடுதலை செய்யப்பட்ட உண்மைகள்
உன்னை விடுதலை செய்யும்!
– தோழர் பொன்னீலன்
இன்றைய நவீன யுகத்தில் ஒரு இனக்குழுமத்தின் சமகால வாழ்வியலை பதிவு செய்வதற்கும் தங்கள் சமூகம் சார் தொன்மங்களை நிறுவி தம்மண் மீதான தம் மக்களின் உரிமைகளை பறைசாற்றுவதற்கும் அச்சமூகம் சார் திரைப்படங்கள் அளிக்கும் பங்களிப்பு இன்றியமையாதது. இலங்கையில் வாழும் இரண்டு தேசிய இனங்களில், சிங்களச் சகோதரர்கள் தங்கள் சமகாலத் திரைப்படங்கள் மூலமும் விஜயகுவேனி, துட்டகெமுனு போன்ற வரலாற்றுத் தொன்மங்கள் சார் திரைப்படங்கள் மூலமும் தங்கள் சமகால வரலாற்றையும் மண் மீதான தங்கள் வரலாற்று உரிமையையும் பதிவு செய்கின்றனர்.
மற்றைய தேசிய இனமான ஈழத்தமிழர்களின் சமகால வரலாறு என்பது கடும் வலிகளும் ஒடுக்குமுறைகளும் நிறைந்த ஒன்று. ஈழத்தமிழர்களின் வலிகளை பேசக் கூடிய சமகாலப் படைப்புகளையோ, அல்லது அவர்களது உண்மையான வரலாற்று பெருமைகளை பேசக்கூடிய தொன்மங்களையோ, எடுக்குமளவுக்கான ஒரு ஜனநாயகவெளி இலங்கையில் தற்போதும் இல்லை. தமிழகத்திலும் ஈழத்தமிழர்களின் சமகால வலிகளை பேசும் படைப்புகளை எடுக்கக்கூடிய வெளி இல்லை என்பதையே தொடர்ந்து ஈழத்தமிழர்களின் சமகால வரலாறுசார் படங்களுக்கு மறுக்கப்படும் தணிக்கை சான்றிதழ்கள் உணர்த்துகிறது. எனவே ஈழத்தமிழர்கள் தமிழகத்தில் தங்கள் தொன்மங்கள் சார் திரைப்படங்கள் மூலம் தான் தங்கள் வரலாற்றை நிறுவி தம்மண் மீதான தம் மக்களின் உரித்தை பதிவு செய்ய முடியும். கதைக்கு எந்த விதத் தேவையும் இல்லாமல் வெறும் வியாபார நோக்கத்துக்காக ஈழத்தமிழர்களை பயன்படுத்தும் தமிழக திரையுலகமும் முன்னணி நடிகர்களும் இந்த வரலாற்றுக் கடமையை ஏற்க முன் வருவார்களா ?
குறிப்பாக எல்லாளளின் உண்மையான வரலாறு என்பது திட்டமிட்டு மறைக்கப்பட்ட தமிழ்த் தேசிய இனத்தின் வரலாறு. வடவிலங்கையில் கோலோச்சி தம் படைத்திறம் மூலம் அனுராதபுரத்தை வெற்றிகொண்ட சேனன் மற்றும் குத்திகனை குதிரை வியாபாரிகளாகவும் சேனனின் மகன் எல்லாளனை சோழ இளவரசனாகவும் சித்தரிப்பதன் மூலம் தொல்பழங்காலம் முதல் இலங்கையின் வடபுலத்தில் வலுவான தமிழரசொன்று நிலவியது என்பதை திரையிடவும், தமிழர்கள் மண்ணின் பூர்வக்குடிகள் என்பதை மறைத்து தொடர்ந்து தமிழர்களை தென்னிந்தியாவில் இருந்து வந்த ஆக்கிரமிப்பாளர்களாகவும் வந்தேறிகளாகவும் சித்தரித்து காட்டும் முயற்சிகளை தகர்த்து எறியவும் இது போன்ற திரைப்பட முயற்சிகள் உதவும்.
No comments:
Post a Comment