Wednesday, 22 May 2019

என்னவள்



தலைக்கனம் மிகுந்தவள் என அவளை அறிமுகம் செய்தனர்
ஏக்கம் கவலை முறைப்பாடு என எதுவும் இல்லை அவளுக்கு
காற்று போல் எங்கும் சிறைப்படாமல் கட்டற்று இருப்பாள்
ஆணெனும் கர்வத்தை சீண்டும் நிமிர்வுள்ளவள் அவள்
புண்படாமல்  எவரும் அவளை அணுக முடியாது
அவள் கர்வமே முதலில் என்னை அவள்பால் ஈர்த்தது

புத்தகங்கள் மிகவும் பிடிக்கும் அவளுக்கு
அதைப் பற்றி மணிக்கணக்கில் கண்கள் விரியப்  பேசுவாள்
நாங்கள் கைகோர்த்து களித்திருந்த நாட்களை விட
நூல் பேசி மகிழ்ந்திருந்த நாட்களே அதிகம்

இவ்வளவு படிக்கும் நீ  எழுதினால் தான் என்ன என்றேன்
சுவைக்கத்  தான் பிடிக்கும் சமைக்கத்  தெரியாதென்றாள்
விளையாட்டாய் நானும்  சமையல் தெரியாதா ?
என்பாடு பின் திண்டாட்டம் தான் என்றேன்
ஏன் பெண்கள் தான் சமைக்க வேண்டுமோ ?
போடா ! நீயும் எல்லா ஆண்களையும் போல்தான் எனச் சினந்தாள்
பின் என்ன நான் அவள் தீயணைக்கப்  போராடி தாழாமல்
மண்டியிட்டு பிழை பொறுக்கக்  கோரினேன்.
ஆண்களை பாதம் பணிய வைப்பதில் பெண்களுக்கு
என்ன தான் மகிழ்ச்சியோ ?

என்னிடம் மிகப் பிடித்தது என்ன என்று கேட்டேன்
குழந்தை ஆண்மகன் என தருணமறிந்து மாறக் கற்றவன் நீ என்றாள்
அன்று ஒருநாள் தனைப் பற்றி கவி ஒன்று பாட ஆணையிட்டாள்
கவிஞனின் கர்வம் சிவனுக்கும் பணியாதென்றேன்
என் காதலை பாடாத நீயென்ன கவிஞன் என்றாள்.
இன்றோ என் எல்லா கவிதைக்கும் அவளே பாட்டுடைத்  தலைவி

அவளிடம் பேசி என்றும் வென்றதில்லை நான்
எல்லா கேள்விகளுக்கும் பதில் ஒன்று வைத்திருப்பாள்
நிறையப்  பேசுவோம் ! ஆனால் சொற்களின் பொருளின்மையை
கற்றுத்  தந்தவளும் அவளே !

அவள் மனதை வென்றதுவே
என் வெற்றிகளில் முதன்மையானது
அவள் கரம் கோரும் போது எவ்விதத்திலும்
அவளுக்கு நிகர் உள்ளவன் இல்லை நான்
இருந்தும்  எனை நம்பி தனையே முழுதளித்தவள் அவள்
இன்று நான் பெற்றதனைத்தும் அவள் அன்பின் கொடை
அவளின் மகிழ்ச்சி ஒன்றே இனி என் வாழ்வின்
இலக்கு, பொருள், புகழ் அனைத்தும் !

கதிரொளி முகம் தழுவ கனவில் இருந்து விழித்துக் கொண்டேன்
நான் இன்னும் சந்திக்காத என் கனவு நாயகியே !
சற்றுப்  பொறுத்திரு ! உன்னை ஓர்நாள் நான் முழுதறிவேன்
முதலில் கருத்தால் பின் என் கரத்தால் !!!

- குமரன் (13/04/2019)

No comments:

Post a Comment