என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்ததில்லையே
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்து கொண்டபின்
என்னிலே இருந்த ஒன்றை யாவர் காண வல்லரோ?
என்னிலே இருந்திருந்து யான் உணர்ந்து கொண்டேனே
உருவும் அல்ல ஒளியும் அல்ல ஒன்றை மேவி நின்றதல்ல
மருவும் அல்ல காதம் அல்ல மற்றதல்ல அற்றதல்ல
பெரியதல்ல சிறியதல்ல பேசும் ஆவி தானும் அல்ல
அரியதாக நின்ற நேர்மை யாவர் காண வல்லரே.
நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறிலை,
நினைப்புமாய் மறப்புமாய் நின்ற மாய்கை மாய்கையோ?
அனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன் அனாதியாய்
எனக்குள் நீ உனக்குள் நான் இருக்குமாறு எங்ஙனே.
இல்லை இல்லை இல்லை என்று இயம்புகின்ற ஏழைகாள்,
இல்லை என்று நின்றதொன்றை இல்லை என்னலாகுமோ?
இல்லை அல்ல என்றுமல்ல இரண்டும் ஒன்றி நின்றதை
எல்லைகண்டு கொண்டோர் இனிப்பிறப்பது இங்கு இல்லையே.
- சித்தர் சிவவாக்கியர்
No comments:
Post a Comment