அதிகாலையில் ஒரு கனவு. யானை ஒன்று என்னைத் துரத்தி வருகிறது. நான் தப்பிக்க முயன்று கால் இடறி கீழே விழுகிறேன். அது பிளிறியபடி வந்து என் மார்பில் மிதிக்கிறது. உடனே ஒரு கணம் முழிப்பு வந்து விட்டது. அது கனவென்று தெரிந்து விட்டது. உடனே கண்ணைத் திறக்காமலே மீண்டும் உறக்கத்துக்குப் போக முயன்றேன். பிறர் என்றால் அப்பாடா கெட்ட கனவு என்று நினைத்துத் தூங்கி விடுவார்கள். எனக்கோ அரைத்தூக்கத்தில் உடனே ஒரு தத்துவக் கேள்வி மனதில் தோன்றிவிட்டது. நாம் கனவு காணும்போது அது மிக உண்மையாகவே இருக்கிறது. நாம் அதைக் கனவென்று அறிவதில்லை. எனவே கனவுக்கும் விழிப்புக்கும் என்ன வித்தியாசம் என்று.
நான் நன்கு விழித்திருந்தால் அத்வைத வேதாந்தத்தை வைத்து கனவுக்கும் நனவுக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்று விரிவாக விளக்கி இருப்பேன். ஆனால் அரைத்தூக்கத்தில் அறிவு மயக்கிக் கிடக்கும் போது ஒரு பதில் தோன்றியது கனவில் வலியோ பயமோ உச்சம் அடையும்போது முழிப்பு வந்து விடுகிறது ஆனால் நிஜவாழ்வில் அது நடக்காது, அது தான் கனவுக்கும் நனவுக்கும் வித்தியாசம் என்று. உடனே இன்னொரு எண்ணம் வந்தது அதை எப்படிச் சொல்ல முடியும் நனவிலும் வலியோ பயமோ உச்சம் அடையும்போது மரணம் வரலாம் அல்லவா என்று. வலியோ பயமோ உச்சம் அடையும்போது நாம் விழித்தெழுவதைக் கனவில் நிகழும் ஒரு மரணம் என்று கொள்ளலாம் அல்லவா. நாம் மரணத்தை இதுவரை சந்திக்காமல் இருப்பதால் தான் நாம் கனவை முழிப்பு வரும் வரை உண்மை என்று நம்புவது போல இவ்வாழ்வையும் உண்மை என்றும் நம்பிக் கொண்டிருக்கிறோமோ என்ற எண்ணம் வந்தது. உடனே மனதில் ஆழத்திலிருந்து ஒரு வரி எழுந்து வந்தது.
“உறங்குவது போலுஞ் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு” என்ற வரி அது. எதில் உள்ள வரி என்று தெரியவில்லை ஆனால் அந்த வரி வந்தவுடன் கேள்வி மறைந்துவிட்டது மீண்டும் உறக்கத்தில் கரைந்துவிட்டேன். காலை மீண்டும் கண்விழித்த பின்னர் முதலில் ஞாபகம் வந்தது அந்தக் கனவும் வரியும் தான். எனக்கு அது ஒரு திருக்குறள் வரியாகத் தான் இருக்க வேண்டும் என்று ஒரு சந்தேகம். ஆனால் “மூவாமுதலா உலகு” என்ற சீவக சிந்தாமணியின் வரி வேறு இந்த வரியை மீண்டும் மீண்டும் சொல்லும்போது ஞாபகம் வந்ததால் எதற்கும் இணையத்தில் தேடிப் பார்ப்போம் என்று தேடினேன். ஆம் திருக்குறள் வரியே தான். "நிலையாமை" என்ற அதிகாரத்தின் கீழ் வரும் குறள்.
“உறங்குவது போன்றது சாவு; உறங்கி விழிப்பது போன்றது பிறப்பு” என்று அதற்கு அர்த்தம். இந்த வரியை நான் படித்ததாக நினைவில்லை எங்கோ யாரோ சொல்லிக் கவனம் இல்லாமல் கேட்டிருக்கக்கூடும் அப்படிக் கேட்ட வரி ஆழ்மனதில் சென்று உறங்கி இருந்து அதற்கான தருணம் வரும்போது மேலெழுந்து வருகிறது. உடனே ஒரு சிலிர்ப்பு வள்ளுவன் எல்லா கேள்விக்குமான பதிலை எப்படி ஈராயிரம் வருடம் முன் எழுதி வைத்திருக்கிறான் என்று. ஜெயகாந்தனின் ஒரு வரி உண்டு “எழுவது எல்லாம் குறளில் சென்று விழுவதற்கு; செல்வதெல்லாம் குறளில் சென்று சேர்வதற்கு” என்று. ஜெயமோகனின் ஒரு வரி உண்டு “ஒரு சிந்திக்கும் தமிழனின் வாழ்க்கை என்பது வாழ்நாள் முழுக்க திரும்பத் திரும்பத் திருக்குறளைக் கண்டடைவது தான்” என்று. எவ்வளவு உண்மையான வார்த்தைகள் என்று நினைத்துக் கொண்டேன். குறள் எழுதிய என் ஐயனின் திருவடிக்கு என்றும் என் வணக்கம்.