உன் நினைவென ஓயாது பெய்துகொண்டிருக்கிறது மழை.
இம்மண்ணிலுள்ள அனைத்தையும் ஈரமாக்கி விட்டாய்.
புதைந்து கிடந்த விதைகளை எல்லாம் முளைத்தெழச் செய்துவிட்டாய்.
எல்லா இடைவெளிகளையும் நிரப்பி வழிகிறாய்.
எல்லாவற்றையும் கழுவிக் கழுவி நீ ஓய்ந்தாய்.
புத்தம் புதியதாக நான் விரிந்து எழ
புதிய வெயிலொளிபோல மென்மையாக
என் மீது படர்கிறாய்.
உன் பெயர் என்னில் ஒருகோடித் துளிகளில் சுடர்விடுகிறது.
உன் மகத்துவங்களுக்கு சாட்சியாவதற்கென்றே படைக்கப்பட்டிருக்கிறேன்.
உன் மௌனத்தால் அடித்தளமிடப்பட்டிருக்கின்றன
என் உரையாடல்கள் அனைத்தும்.
உன்னுடைய அசைவற்ற ஆழத்தின் மீது
சுழிக்கும் அலைகளே நான்.
உன்னை நிசப்தமாகப் பிரதிபலித்தபடி
வியந்து கிடப்பதே என் கடனென்று உணர்கிறேன்.
- ஜெயமோகன்