நண்பர்கள் பலர் என்னிடம் அடிக்கடி சொல்லி கோபப்படும் விடயம் சமூகம் தங்களை கூர்ந்து நோக்கிக் கொண்டே இருக்கிறது. எப்போதும் யாரோ ஒருவர் தங்களை நோக்கி கேள்வி கேட்டபடியே இருக்கிறார்கள் என்பது. நான் அவர்களுக்கு வெவ்வேறு வகையில் சொல்லி விளங்க வைக்க முயல்வது எளிய மனிதர்களின் உளவியலை புரிந்து கொள்ளுங்கள் என்பதே.
இந்தச் சமூகம் என்பது எளிய மக்களின் திரள் தான். எளிய மக்கள் எந்த சுயஅடையாளமும் இல்லாதவர்கள். தாங்கள் எண்ணி பெருமை கொள்ளும் எதையும் செய்தறியாதவர்கள். அதன் பொருட்டு அகத்துள் ரகசியமாக கூசிக்கொண்டே இருப்பவர்கள். மற்றவர்களுடன் ஒப்பிட்டு தான் மேம்பட்டவன் என்று எண்ணி மகிழ்வதோன்றே அவர்களால் செய்ய இயல்வது. உங்கள் வேலையை தங்களுடன் ஒப்பிட்டு ஒரு படி குறைவானது என்றால் மகிழ்வார்கள். திருமண வயதில் உள்ளவர்களுக்கு திருமணம் ஆகவில்லை என்று சொன்னால் ஆழ்ந்த அனுதாபத்துடன் ஆலோசனைகள் சொல்வதுபோல மகிழ்ச்சியில் திளைப்பார்கள். கல்வி, வேலை, திருமணம், குழந்தைகள் என உங்கள் சொந்த வாழ்க்கை பற்றி அவர்கள் அறிய விளைவது அதற்காகவே.
இந்தப் புரிதல் உங்களுக்கு இருந்தால் உங்களுக்கு கோவம் வராது. உண்மையில் அவர்களை நோக்கி உங்களுக்கு அனுதாபம் தான் வரவேண்டும். அவர்கள் செயல்களை பொருட்படுத்தக்கூடாது. ஒரு மென்புன்னகையுடன் அவர்களை கடந்து செல்வதே நீங்கள் செய்யக்கூடியது. நீங்கள் உங்கள் அகம் நிறைவுறும் செயல்களைச் செய்பவர் என்றால் இவர்கள் எல்லாம் உங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை. இவர்கள் மீது உங்களுக்கு கோவம் வரும் என்றால் நீங்களும் உங்கள் அகத்துள் ரகசியமாக எங்கோ உங்களை நினைத்து கூசிக்கொண்டே இருக்கிறீங்கள் என்றே பொருள். அதன் வேரை கண்டறிந்து களையுங்கள் நீங்களும் இவர்களை பிரியத்துடன் புன்னகைத்து கடந்து செல்வீர்கள்.
நானும் ஒருகாலத்தில் இதையெல்லாம் பார்த்து உளம் கொதித்தவன் தான். ஆனால் இன்றோ இச்சிறுமைகள் தொடமுடியா உயரத்தில் எங்கோ உளம் கனிந்து சென்றமைந்திருக்கிறேன்.
No comments:
Post a Comment