Thursday 16 March 2023

குவாஜா மொய்னுதீன் சிஷ்டி

இன்று இஸ்லாமிய சூபி மெய்ஞானியான மொய்னுதீன் சிஷ்டியின் நினைவு தினம். குவாஜா! என் ஆணவம் பணியும் காலடி  கொண்டவர் நீங்கள். என்றோ ஒருநாள் நானும் என் கண்ணில் நீர் துளிர்க்க சடாரை (புனிதத் துணி) தலையில் தூக்கிச் சுமந்தபடி உங்களைத் தேடி அஜ்மீர் தர்காவுக்கு வருவேன். உங்கள் திகழ்விடத்தின் கால் பகுதியில் உள்ள சலவைக்கல்லில் என் தலைவைத்து வணங்க. உங்கள் அருகமர்ந்து  சிறிது நேரம் தியானிக்க.

மெய்மை என்பது எங்கும் எப்போதும் இருப்பது. அது ஒரு குறிப்பிட்ட இனக்குழுவுக்கோ இல்லை மதத்துக்கோ மட்டும் வெளிப்படுத்தப்பட்டதோ இல்லை உரித்தானதோ அல்ல. மெய்மை என்பது அகவயமான கனிதலால் சென்றடைய வேண்டிய ஒன்று. விடுதலை என்பது ஒரு காய் கனிந்து பழமாகி ஒரு மாயக்கணத்தில் தன்னை மரத்தோடு பிணைத்து வைத்திருக்கும் காம்பிலிருந்து விடுவித்துக் கொள்வதைப் போல் இயல்பாக நிகழவேண்டிய ஒன்று. அதை எந்த மதவெறியர்களும் ஒரு போதும் அடையப்போவதில்லை. தங்கள் மதத்தை இறுகப்பிடித்துக் கொள்பவர்கள் மெய்மையை என்றும் சென்றடைவதில்லை. அவர்கள் பாதையைப் பிடித்துக்கொண்டு இலக்கை கைவிடுபவர்கள்.

மெய்ஞானிகள் எல்லா மதத்திலும் இனத்திலும் தோன்றி இருக்கிறார்கள். தன் மதத்தைத் தூக்கிப் பிடித்து பிறிது அனைத்தையும் வெறுத்து காழ்ப்பைக் கக்கி எள்ளி நகையாடும் மனிதர்கள் வாழ்வின் இறுதியில் வெறும் கசப்பையும் இருளையுமே சென்றடைவார்கள். அவர்களுக்கு மீட்பென்பது இல்லை. இத்தகையோர் மத்தியில் அன்பையும் சமத்துவத்தையும் அகவயமான ஆன்மிகப்பயணத்தையும் முன்வைத்த மொய்னுதீன் சிஷ்டியின் காலடிகள் என்றும் என் வணக்கத்துக்குரியவை.

No comments:

Post a Comment