ஆதித்த கரிகாலனை பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன். அவன் உளவியலை பல்வேறு முறையில் புரிந்து கொள்ளமுடியும். “கொலை வேழத்தின் பெருங்கருணையை ஒருவன் மட்டிலுமே அறிவான். ஒவ்வொரு நாளும் அதன் காலடியில் வாழும் எளிய பாகன்” என்ற ஒரு ஜெயமோகனின் நாவல் வரி ஞாபகம் வந்தது. ஆம் தொலைவில் இருந்து பார்ப்பவர்களுக்கு கரிகாலன் ஒரு கொலை வேழம். ஆனால் உண்மையில் அவன் ஒரு பெருங்கருணையாளன். அருண்மொழி இறந்துவிட்டான் என்று பார்த்திபேந்திர பல்லவன் குறிப்புணர்த்தியவுடன் உடைந்து அவன் கன்னத்தில் அறைவான். உடனே திரும்பி ஏவலனை கைகாட்டி செம்பில் தண்ணீர் கொண்டு வரச்சொல்லி பல்லவனிடம் கொடுப்பான். அவ்வளவு வலியிலும் கோபத்திலும் கூட நீண்ட தொலைவில் இருந்து வந்திருக்கிறான்; எனவே தாகமாக இருப்பான் என நினைத்து. பின் நீ வந்து நல்ல செய்தி சொல்வாய் என்று காத்திருந்தேனே ஏமாற்றிவிடாயே என்று சொல்வான். பல்லவன் தண்ணீரை குடிக்காமல் அவனுக்கு பதில் சொல்ல முனைவதை பார்த்து அவனே அந்த தண்ணீர் செம்பை பல்லவன் வாயருகே கொண்டு சென்று “இம்” என்று சொல்லி குடிக்கச் செய்வான். அது தான் கரிகாலன். இப்படி அவன் பெருங்கருணையை காட்டும் பல நுண்மையான காட்சிகள் படத்தில் உள்ளது. பெரும் கருணையாளர்களே பெரும் கொடையாளர்களாகவும் இருக்கமுடியும். அதனால் தான் உத்தமசோழனுக்கு முழு சோழநாட்டையும் விட்டுக் கொடுக்கிறான்.
அவன் ஒரு கண கோபத்தில் வீரபாண்டியன் தலையை வெட்டிய உணர்வை புரிந்து கொள்ளமுடியாத ஆண்மகன்கள் இங்கு யாரும் இருக்க முடியாது. என்னவள் என்று நினைத்த ஒருத்தி; அவன் தன் வாழ்வனைத்தும் நினைத்து உருகிய ஒருத்தி, அவன் பரம எதிரியோடு இருக்கிறாள். அவனுக்காக இவனிடம் மன்றாடுகிறாள். அவனின் ஆண் என்னும் கர்வம் முற்றாக புண்பட்ட, உடைந்து சரிந்த கணம் அது. அதனால் வந்த ஆத்திரம். அந்த இடத்தில எந்த ஆண்மகனும் கரிகாலன் செய்ததை விட வேறு எதுவும் செய்துவிட முடியாது. ஆனால் அவன் பெருங்கருணையாளன் என்பதால் தான் போரில் காயம்பட்டு குற்றுயிராக போராடும் ஆற்றல் அற்று விழுந்து கிடந்த ஒருவனில் தலை கொண்டது அவன் மனதில் ஆழமான குற்ற உணர்ச்சியை விதைத்துவிட்டது. அவன் தன்னையே கூசத் தொடங்கினான். தன்னை பழிவாங்க வேண்டும் என்பதற்காக ஒரு கிழவனை மணந்து தன் நல்லியல்பெல்லாம் இழந்து சதிகாரி ஆகி தன் வாழ்வை அழித்துகொள்கிறாள் நந்தினி என்று நினைத்து நடைப்பிணம் ஆகிறான். அவன் மரணம் கூட அவன் பெருங்கருணையால் அவள் இனியாவது நிறைவாக வாழட்டும் என்று அவளுக்கு பரிசாக கொடுக்கப்பட்டது தான்.
ஆனால் அதை விட இன்னும் நுண்மையான ஒரு உளவியல் இருக்கிறது. பெருங்கருணையாளர் எல்லோரும் எதோ ஒரு வகையில் தன்னளவில் ஒரு நிமிர்வை உணர்வார்கள். தான் ஒரு பேரறத்தான் என்று அவர்கள் அகம் உணர்வதால் வரும் நிமிர்வு. அந்த நிமிர்வு உடைந்தது வீரபாண்டியன் கொல்லப்பட்ட விதத்தால். அவன் அந்த உடைவை தன் உயிர் கொடுத்து மட்டுமே நிகர் செய்யமுடியும். அது வேறு யாருக்காகவும் அல்ல அவனுக்காக. மார்பில் கத்தி இறங்கி உயிர் போகும் அந்த கடைசி தருணத்தில் கரிகாலன் மீண்டும் தன் நிமிர்வை உணர்த்திருப்பான். தான் ஒரு பேரறத்தான் என்ற கர்வத்தில், நிறைவில் உயிரை விட்டிருப்பான். ஆம்! அவனொரு மண் திகழ்ந்த பேரறத்தான். அவன் அவ்வாறு மட்டுமே நிறைவடைய முடியும். அவன் மரணம் என்பது ஒரு காவிய முழுமை. சித்திரை முழுநிலவில் தேவர்கள் மண்ணிறங்கும் பொழுதில் கோப்பரகேசரி வர்மன் ஆதித்த கரிகாலனுக்கு நிறைவு!🙏
No comments:
Post a Comment