நாவல் படித்த பலர் பொன்னியின் செல்வன் கதையை மணிரத்னமும் ஜெயமோகனும் கெடுத்துவிட்டார்கள் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். அது உண்மையல்ல. இரண்டு விடயங்களில் தெளிவு இருக்க வேண்டும். ஒன்று நாவலும் சினிமாவும் வேறு வேறு கலை வடிவம். ஒவ்வொரு கலை வடிவுக்கும் அதற்கென்று ஒரு Grammar அதற்கென்று சில குறைபாடுகள் உள்ளன. எனவே ஒரு கலைவடிவத்தில் இருந்து இன்னொன்றாக அப்படியே மாற்றமுடியாது. உதாரணம் இதே பொன்னியின் செல்வனை மேடை நாடகமாக நடித்தால் இன்னும் வேறு விதமான மாற்றம் வரும் ஏனென்றால் மேடையிலே ஒரு frame க்குள் real-time இல் கதை சொல்லவேண்டும் எனவே அதற்கு தகுதியான கதை பகுதி மட்டும் எடுத்தாளப்படும். மீனைக் கொண்டு வந்து தரையில் விட்டுவிட்டு என்ன மீன் நீந்தவில்லை துள்ளிக் கொண்டு இருக்கிறது என்று குறைபட்டுக் கொண்டிருக்ககூடாது.
இரண்டாவது விடயம் இலக்கியம் என்னும் கலை ஆயிரம் வாசிப்புக்கு இடம் தருவது. பொன்னியின் செல்வன் கதையை வாசிக்கும் ஒரு கம்யூனிஸ்ட் பூ கட்டும் சேந்தன் அமுதனும் படகு ஓட்டும் பூங்குழலியும் சோழ அரியாசனத்தில் அமர்கிறார்கள் எனவே பாட்டாளி மக்கள் அரசாளும் காலம் இனி வரும். இன்று புவியாளும் அரசியல்வாதிகளும் முடிதுறந்து பாட்டாளிகள் தலையில் கீரிடம் வைப்பார்கள் என்று பூடகமாக சொல்கிறார் கல்கி அதுதான் இந்த நாவலின் உச்சம் என்று புரிந்து கொள்ளலாம். அது அவர் பார்வை அவ்வளவு தான். அப்படி ஒவ்வொருவரும் தமக்கானதாக அதை புரிந்து கொள்ள முடியும். இலக்கியத்தின் அழகே அது தான். முடிவில்லா சாத்தியத்தின் பெருவெளி.
மணிரத்னம் இதை முதன்மையாக ஒரு காவியக் காதலாக, பின் தியாகத்தின் சிகரமாக புரிந்து கொண்டார். அதுவே கல்கி சொல்ல வருவது அது என்று நினைத்தார். எனவே ஜெயமோகன் அந்த உச்சத்தை நோக்கி கதை அமைத்தார். நாவல் என்ற வடிவம் பல திசைகளில் ஆயிரம் இதழ் விரிக்கும் ஒரு மலரைப் போல பரவமுடியும். ஆனால் சினிமா இறுதியில் ஒரு உச்சத்தை நோக்கி நகர்த்தாக வேண்டும். எனவே சேந்தன் அமுதன் ஆள்மாறாட்டம், மணிமேகலை என்று எல்லாம் தொடர்ந்து வேறு வேறு திசைகளில் திரும்பி கொண்டு இருக்கமுடியாது. அப்படி செய்தால் சினிமா என்ற கலைவடிவின் வடிவ ஒருமை கைகூடாது. எனவே காவியக் காதல், தியாகத்தின் சிகரம் நோக்கி கதை நகர்த்தப்பட்டது. காதலின் கத்தி கரிகாலன் நெஞ்சில் பாய்ந்து இறந்தான் என்பது தான் அந்த காவிய காதலில் கவித்துமான உச்சமாக இருக்க முடியும் எனவே திரைக்கதையை அப்படி கொண்டு சென்றார்கள்.
நாவலில் உள்ளது போல மக்களும் சிற்றரசர்களும் அருண்மொழிக்கு அளித்த அரசை அவன் மதுராந்தகனுக்கு அளித்தால் அதில் அவனுடைய மாண்பென ஏதுமில்லை. இந்தப்படத்தில் அருண்மொழியே போரில் ராஷ்ட்ரகூட அரசனை வென்று சோழநாட்டை அடைகிறான். அதை மதுராந்தகனுக்கு அளிக்கையில்தான் அவனுடைய முழுமையான தியாகமும் மேன்மையும் வெளிப்படுகிறது எனவே திரைக்கதையை அப்படி கொண்டு சென்றார்கள்.
நீங்கள் எதிர்பார்ப்பது போல் பொன்னியின் செல்வனை கல்கி எழுதியதுக்கு நெருக்கமாக எடுக்கவேண்டும் என்றால் வெப் சீரிஸ் மட்டுமே சாத்தியம். சினிமா என்கிற வடிவம் அதற்கு பொருந்தாது. இது வாரம் ஒரு அத்தியாயமாக வெளிவந்தது. எனக்கு ஒவ்வொரு வாரமும் முடிவில் ஏதாவது ஒரு cliff-hanger வைக்கவேண்டும் என்பதற்காக பல திருப்புமுனைகளை கல்கி உள்ளே வைத்தார். அதே அப்படியே படமாக்க முடியாது படத்தில் 5 நிமிடத்துக்கு ஒரு திருப்பம் என்று வந்துவிடும். 20 நிமிடம் இல்லை 40 நிமிட எபிசொட் ஆக இது சாத்தியம்.
பூமணியின் வெக்கை நாவல் வேறு வெற்றிமாறனின் அசுரன் வேறு. ஜெயமோகனின் ஏழாம் உலகம் வேறு பாலாவின் நான் கடவுள் வேறு. ஆங்கிலத்தில் கூட அப்படி தான். Based on என்று சொன்ன எந்த புத்தகமும் அப்படியே எடுக்கப்படவில்லை. ஏன் கிளைமாக்ஸ் மாற்றப்படுவது கூட அரிதாக நடக்கிறது. Dan Brown எழுதிய Inferno வேறு படமாக வந்த Inferno வேறு. இந்த படத்தை போலவே முற்றிலும் கிளைமாக்ஸ் மாற்றப்பட்டது.
நான் கூட சேந்தன் அமுதன் முடிசூட்டல் நடக்கும் புத்தகம் படிக்காதவர்களுக்கு செம்ம ட்விஸ்ட் ஆக இருக்கும் என்று தான் நினைத்தேன். அவர்கள் கதையை எப்படி நகர்த்தி இருக்கிறார்கள் என்று பார்க்கும் போது அது தவிர்க்கமுடியாதது என்று புரிந்துகொண்டேன். நீங்கள் அந்த சேந்தன் அமுதன் முடிசூட்டல் அடிநாதம் என்று நினைக்கிறீர்கள். மணிரத்னம் நினைக்கவில்லை என்பது தான் உண்மை.
ஒவ்வொரு இயக்குனருக்கும் ஒவ்வொரு அழகியல் பார்வை இருக்கிறது. மணிரத்னத்தின் அழகியல் என்பது கவித்துவம் நோக்கி நகர்வது. உதாரணமாக சுந்தரசோழரிடம் அருண்மொழியை கைது செய்ய சொல்லி பழுவேட்டரையர் சொல்லும் போது, சுந்தரசோழர் முதுகில் வைத்தியர் ஊசியால் குத்தி கொண்டு இருப்பார். அவர்கள் இவர் முதுகில் குத்துகிறார்கள் என்பதை கவித்துவமாக சொல்லி இருப்பார். பழுவேட்டரையர் நந்தினியிடம் பேசவரும் போது எல்லாம் கவசங்களை பெண்கள் கழட்டிகொண்டிருப்பார்கள். அவர் அவள் முன் தன் அனைத்து கவசங்களை கழட்டிவிட்டு நிராயுதபாணியாக நிற்கிறார் என்று குறிப்புணர்த்தும் காட்சி அமைப்பு. சிறுவயது நந்தினி தொடக்க காட்சியில் நீரில் இருந்து எழுந்து வருவாள். அவள் இறுதி காட்சியில் நீரில் மூழ்குவாள். இப்படி அந்த படத்தில் கொண்டாட எவ்வளவோ இருக்கிறது. எனவே நாம் எதிர்பார்த்த விடயம் இல்லை என்பதற்காக வருந்த தேவையில்லை. அதற்காக அந்த படத்தை புறக்கணிக்க வேண்டும் என்று சொல்வதும் காழ்ப்பை கொட்டுவதும் நிச்சயம் கூடாது.
No comments:
Post a Comment