பொன்னியின் செல்வன் மீதான விவாதங்களில் நான் கனிவோடு அணுகும் ஒரே தரப்பு அந்த நாவலை முழுதும் வாசித்துவிட்டு இந்த படத்தை குறை சொல்பவர்களை மட்டும் தான். தமிழ் சூழலில் கலை இலக்கிய பயிற்சி தற்செயலாக தான் அறிமுகம் ஆகும். இங்கு அவற்றை அறிமுகம் செய்ய முறையான அமைப்புகள் இல்லை. எனவே பலருக்கு வணிக இலக்கியம் தீவிர இலக்கியம் என்ற பிரிவினை இருப்பதே தெரியாது. நானே கூட 2014 வரை பொன்னியின் செல்வன், கடல்புறா போன்ற வணிக இலக்கியங்களை தான் நவீன தமிழின் உச்சகட்ட சாதனை என்று நினைத்துக் கொண்டிருந்தேன். மணிரத்னம் பொன்னியின் செல்வன் போன்ற ஒரு வணிக இலக்கியத்தை எடுத்து ஒரு கலைப் படைப்பை உருவாக்கி இருக்கிறார்.
பொன்னியின் செல்வன் படத்தை நாவலோடு ஒப்பிட்டு விமர்சனம் செய்ய முன்னர் எது வணிக இலக்கியம் எது தீவிர இலக்கியம் என்பதை தெரிந்து கொள்வது முக்கியம். வணிக இலக்கியம் (popular fiction) வாசகனை நோக்கி எழுதப்படுகிறது. அதில் வாசகன் தான் பிரதானம். அவனை திருப்திப்படுத்துவதே அதன் நோக்கம். உதாரணமாக பொன்னியின் செல்வனை எடுத்துக் கொள்வோம். கல்கி உண்மையில் அதை 60 அத்தியாயம் கொண்ட நாவலாகவே எழுத நினைத்தார். ஆனால் அது வாரா வாரம் வெளியான போது பெரு வெற்றி பெற்றதால் கல்கி நிர்வாகி சதாசிவத்தின் வற்புறுத்தலால் அதை 3 வருடங்கள் நீடிக்க வேண்டியதாகி விட்டது. அதனால் தான் சேந்தன் அமுதன், மணிமேகலை என்று பல திசைகளில் அதை வளர்த்தெடுத்தார். ஏன் ஆழ்வார்க்கடியான் பாத்திரம் கூட சிறு பாத்திரமாகவே கல்கி எண்ணியிருந்தார் ஆனால் அந்த பாத்திரம் மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றதால் அதை பெரிய பாத்திரம் ஆக்கினார். 'பொன்னியின் புதல்வர்' என்ற கல்கியின் வாழ்க்கை வரலாற்று நூலில் இவை பதிவாகி உள்ளன.
எனவே வணிக இலக்கியத்தில் வாசகனே முதன்மை. இரண்டாவதாக வணிக இலக்கியத்தை புரிந்து கொள்ள வாசகன் எதையும் கற்று வைத்திருக்க தேவை இல்லை. அது பொது வாசிப்புக்குரியது. வாசகனுக்கு புரிவது போல் எழுத வேண்டியது ஆசிரியரின் கடமை. தமிழ் சரளமாக வாசிக்கத் தெரிந்த எவரும் பொன்னியின் செல்வனை வாசித்து விட முடியும். இதே வகைமையை சார்ந்ததே துணிவு, வாரிசு போன்ற வணிக திரைப்படமும் (Commercial Cinema). அதன் நோக்கம் ரசிகனை திருப்திப்படுத்துவது. அவனுக்கு புரிவது போல் படமெடுப்பது. கண்ணும் காதும் ஒழுங்காக செயல்படும் எவரும் துணிவு, வாரிசு படங்களை பார்த்துவிட முடியும்.
தீவிர இலக்கியம்(literary fiction) என்பது முற்றிலும் வேறு. அது மேலும் நுண்மையானது, அழகியல் சார்ந்தது. அது வாசகனை நோக்கி எழுதப்படுவது இல்லை அது எழுத்தாளனின் ஒரு அகவெளிப்பாடு. அது தன்னிச்சையானது. அது எழுத்தாளனின் அகவயமான மனஎழுச்சியையும், தேடலையும் ஆதாரமாகக் கொண்டுள்ளது. அவன் எழுதும் போது வாசகனை பற்றி எந்த நினைவும் அவனிடம் இருக்காது எனவே வாசகனுக்கு புரிய வைக்கும் தேவையும் அவனுக்கு இல்லை. வாசகன் அதை நோக்கி முயன்று சென்று அதை புரிந்து கொள்ள வேண்டும். எனவே அதை ஒரு வாசகன் இயல்பாக ரசிக்க முடியாது. அவனுக்கு கொஞ்சம் பயிற்சி தேவை. அப்பயிற்சியை அடைய அவனுக்கு ஆர்வமும் பொறுமையும் இருந்தாகவேண்டும். இத்தகைய வேறுபாட்டை வகுத்துக் கொள்ளாத ஒருவர் தீவிர இலக்கியப்படைப்பை அறியவே இயலாது. ஆயிரம் வணிக இலக்கிய நூல்களை ஒருவர் வாசித்தாலும் ஒரு தீவிர இலக்கிய நூலை புரிந்து கொள்ள முடியாது. அது முற்றிலும் வேறு ஒன்று. கலைப் படமும் இதே வகைமையை சார்ந்ததே. தமிழில் முற்று முழுதான ஒரு கலைப்படத்தை எடுத்து திரைக்கு கொண்டு வந்து விட முடியாது. பார்வையாளர்கள் மிகக்குறைவு. எனவே முடிந்த வரை வணிக சாத்தியத்தை பாதிக்காமல் கலைப்படத்துக்கு மிகமிக நெருக்கமானதாகவே மணிரத்தினம் இதை எடுத்திருக்கிறார்.
எனவே மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வனை புரிந்து கொள்ள ஒரு கலை படத்தை பார்ப்பது எப்படி என்ற புரிதல் கட்டாயம் வேண்டும். அதற்கு விரிவான முன் தயாரிப்பும் பண்பாட்டு பயிற்சியும் வேண்டும். நான் பொன்னியின் செல்வன் போன்ற வணிக இலக்கியம் வாசிக்கும் நண்பர்களுக்கு சொல்வது ஒன்றே. தமிழ் சூழலில் புத்தகம் வாசிப்பதை காண்பது அரிது. நீங்கள் இவ்வளவு பேர் புத்தகம் வாசித்திருப்பது மகிழ்ச்சியே. நீங்கள் எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன் போன்ற தீவிர இலக்கியவாதிகளையும் வாசித்து பாருங்கள். உங்களில் இருந்தும் ஒரு சில தீவிர இலக்கியவாசகர்கள் எழுந்து வரக்கூடும்.
என்னையும் சேர்த்து இங்கு தீவிர இலக்கியம் வாசிப்பவர்கள் எல்லோரும் உங்களில் இருந்து எழுந்து வந்தவர்கள் தான். நான் பொன்னியின் செல்வன் பற்றி தொடர்ந்து எழுதுவதன் நோக்கம் இந்த விவாதத்தை பயன்படுத்தி உங்களில் இருந்து பலரை தீவிர இலக்கியம் நோக்கி நகர்த்துவதே. ஆரம்பகட்டமாக வாசிக்க கூடிய தீவிர இலக்கிய புத்தக பரிந்துரை தேவை என்றால் என்னை தொடர்பு கொள்ளுங்கள். நானும் உங்கள் சகபயணி தான். உங்கள் இடத்தில் இருந்து தற்செயலாக கிடைத்த இலக்கிய அறிமுகம் மூலம் ஒரு சிறு அடி முன்வைத்திருகிறேன் அவ்வளவே.
நமக்குள் இப்போது நடக்கும் இலக்கிய சர்ச்சை நக்கீரர் காலத்தில் இருந்தே தமிழில் நடந்துவரும் சர்ச்சைதான். எனவே இதை தனிப்பட்ட அளவில் எடுத்து உங்கள் நட்புக்களை கெடுத்துக் கொள்ளாதீர்கள். வணிக இலக்கியம் தீவிர இலக்கியம் என இரண்டும் தமிழுக்கு தேவையே. அடிப்புல் மேய்ந்தாலும் நுனிப்புல் மேய்ந்தாலும், தமிழ் புல் மேய்வதே தமிழுக்கு செய்யும் தொண்டு தான். எனவே அனைவரும் தொடர்ந்து மேய்க. நம்மால் தமிழன்னை பொலிக!!
No comments:
Post a Comment