Sunday 7 May 2023

கலைப்படைப்பை விமர்சனம் செய்வது எப்படி?

மந்தாகினியின் மரணத்தின் போது பின்னணியில் ஒலிக்கும் அந்தப் பாடலை வைத்து அக்காட்சியை இன்னும் நுண்மையாக புரிந்து கொள்ள முடியும். “இளையோர் சூடார் ; வளையோர் கொய்யார்” என்று தொடங்கும் பாடல் அது. கொஞ்சம் பண்பாட்டுப் பயிற்சி உள்ளவர்களுக்கு அது ஒரு சங்கப்பாடல் என்று தெரிந்திருக்கலாம். அது வெறும் இறப்பின் சோகத்தை சொல்லும் பாடல் அல்ல. அப்படி இருந்தால் அதை கரிகாலன் மரணத்துக்கு பயன்படுத்தி இருக்க முடியும் அல்லவா? அது சாத்தன் என்ற வீரனை பாட்டுடைத் தலைவனாக கொண்டது அவன் மரணத்தைப் பற்றி பேசுகிறது. அப்படிப் பார்த்தால் கரிகாலனுக்கு மேலும் அணுக்கமானது. ஆனால் ஏன் இங்கு பயன்படுத்தினார்கள்? இது புரிந்தால் அந்தக் காட்சி இன்னும் ஆழமாக பொருள் கொள்ளும்.

அந்த சங்கப் பாடலது அடிநாதம் இறப்பின் சோகம் அல்ல இறப்பால் வந்த கையறு நிலை. கரிகாலன் இழப்பு கையறு நிலை அல்ல. அவன் இடத்தை நிரப்ப வீரமும் மாண்பும் நிறைந்த அருண்மொழி இருக்கிறான். ஆனால் மந்தாகினியின் மரணம் அப்படிப்பட்டதல்ல. அருண்மொழியின் உயிரையும், சுந்தரசோழனின் உயிரையும் காவல் தெய்வம் போல வந்து பலமுறை காத்தவள் அவள். இன்று அவளோ மரணித்துவிட்டாள். அவர்கள் காவல் தெய்வம் இல்லாத கையறு நிலையில் இருக்கிறார்கள். அவளது இடம் இனி யாராலும் இட்டு நிரப்பக்கூடியது அல்ல என்று அந்தப் பயன்பாடு குறிப்புணர்த்துகிறது.

அந்த சங்கக் கவிதையை கற்று வைத்திருந்தவர்கள் மட்டும் தான் அந்த நுண்மையை புரிந்து கொள்ளமுடியும். அந்தக் காட்சி இன்னும் பலமடங்கு பொருள் கொள்ளும். நீங்கள் புத்தகத்தில் படித்த மந்தாகினியின் மரணத்தை வைத்து இதை மதிப்பிடக்கூடாது. 

இதற்கு தான் நாங்கள் சொல்கிறோம் கலைப்  படைப்பை விமர்சனம் செய்ய வாசிப்பில், ரசிப்பில், பண்பாட்டில்  பயிற்சி தேவை என. அப்படைப்பை அறிவதற்கான உண்மையான முயற்சி உங்களுக்கு இருக்க வேண்டும். அந்த படைப்பு கோருவதை செய்து, அதை நோக்கிச் சென்று, அதை அடைந்து, அதன் பின்னர் சொல்லப்படும்  விமர்சனங்களுக்கே மதிப்பு.  வணிக இலக்கிய, வணிக சினிமா ரசனைகளை வைத்து கலைப் படைப்புகளை மதிப்பிட கூடாது. அது ஒரு அழகிய ஓவியத்தின் முன் விழி மூடி நின்று கைகளால் தடவிப்பார்த்து கருத்து சொல்வது போன்ற அபத்தமான செயல்.

No comments:

Post a Comment