பொன்னியின் செல்வனுக்கு எதிராக பலவகையான சார்புநிலை கொண்ட கும்பல்கள் அரைவேக்காட்டுதனமான விமர்சனங்களையும், காழ்ப்புக்களை வைத்து கொண்டே இருக்கின்றனர். விரிவான வரலாற்றுப் புரிதல் இல்லாமல் ஒற்றைப்படையான வரலாற்று புரிதல் கொண்ட பிராமண எதிர்ப்பு குழு, புலிக்கொடியை நன்கு தூக்கி காட்டவில்லை, ராஜராஜன் புத்த பிக்குகள் முன் பம்முகிறார் என்று தமிழ்த் தேசியக் குழு, பாடல்களில் இந்துஸ்தானி ராகத்தை பாவித்துவிட்டார்கள், புது இசைக்கருவிகளை பயன்படுத்திவிட்டார்கள், தமிழ் பழைய தமிழ் போல் இல்லை என்று தமிழ் தூய்மைவாத கூட்டம், பூ கட்டும் சேந்தன் அமுதனும் படகு ஓட்டும் பூங்குழலியும் சோழ அரியாசனத்தில் அமரவிடாமல் செய்துவிட்டார்கள் இது பாட்டாளி மக்களுக்கு எதிரான நுண்ணரசியல் என்று ஒரு குழு, இதெல்லாம் கூட பரவாயில்லை இந்த வருடம் வந்த வாரிசு பட வசூலை PS-2 முந்திவிட்டால் தங்கள் தலைவனின் மானம் என்னாவது என்று படத்தின் மீது காழ்ப்பை கொட்டும் ஒரு புதுக் கும்பல்.
இந்த கூட்டத்தினருக்கு கனவும், கலையும் முக்கியம் இல்லை தங்கள் தரப்பும், அரசியலும், தங்கள் சாராசரித்தனத்தை மறைக்க நான் எவ்வளவு புத்திசாலி தெரியுமா படம் எடுத்தவர்களுக்கு எனக்கு தெரிந்த இந்த சின்ன விஷயம் கூட தெரியல என்று காட்ட முனையும் அதிமேதாவிதனங்களும் எள்ளல்களும் தான் முக்கியம். அதற்காக எந்த பெருமுயற்சியையும் அழிப்பார்கள். ஒரு படத்தை பார்த்து பிடித்திருக்கிறது இல்லை என்று சொல்ல எல்லாருக்கும் உரிமை உண்டு. அபிப்பிராயம் சொல்ல உரிமை உண்டு. ஆனால் அதற்கு மேல் சென்று ஒரு கலைப்படைப்பை விமர்சிக்க, நிராகரிக்க கட்டாயம் சில தகுதிகள் தேவை என்று இந்த கும்பல்களுக்கு யார் தான் புரிய வைப்பது.
மொண்ணைத்தன விமர்சனங்களை சொல்பவர்கள் பெரும்பாலானவர்கள் நான் பார்த்தவரை படித்தவர்கள். தாங்கள் பட்டப்படிப்பு படித்தவர்கள் என்பதாலேயே தங்களுக்கு அனைத்தையும் பற்றி விமர்சிக்க தகுதி உண்டு என்று நம்புபவர்கள். தமிழ் மரபு கொண்டாடும் கல்வி என்பது இவர்கள் படிப்பு என்று சொல்லும் பட்டப்படிப்புகள் அல்ல, அது ஒரு முழுமைக்கல்வி (holistic learning). நவீன கல்வி மூலம் இவர்கள் பெறுவது வெறும் தொழில் கல்வி. அதிலிருந்து சிலர் நுண்ணுணர்வால் எழுந்து முழுமைக் கல்வியை நோக்கி செல்வார்கள் அவர்களே உண்மையில் கற்றவர்கள். இந்த அதிமேதாவி கும்பலை பார்த்து நான் சொல்ல ஒன்றே உண்டு “You just have degrees, don’t think you are intellectuals.”
நிதர்சனம் தொலைக்காட்சி இயக்கத்தால் தொடக்கப்பட்ட போது அதை எப்படி மேம்படுத்தலாம் என்று ஒரு கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்துக்கு கம்பவாரிதி ஐயாவும் யாழ்ப்பாணத்தில் பிரபலமான ஒரு நாடகாசிரியரும் (பெயர் மறந்துவிட்டது) அழைக்கப்பட்டிருந்தனர். கூட்டம் தொடங்கிய உடனே ஒருவர் எழுந்து நிதர்சனம் என்ற பெயர் நியூமெராலஜி படி சரியில்லை மாற்றவேண்டும் என்று சொன்னார். பின் ஒருவர் நிதர்சனம் என்பது தமிழ் வார்த்தை இல்லை என்று தொடங்கினார். இப்படி இந்த பெயர் குறித்த சர்ச்சை மாறி மாறி இரு மணித்தியாலங்கள் நடந்தது. அதுவரை பொறுமையாக ஒன்றும் பேசாமல் அமர்ந்திருந்த அந்த நாடக ஆசிரியர் எழும்பி, நான் ஒன்று சொல்ல வேண்டும் என்று சொன்னார். எல்லாரும் திருப்பி அவரை பார்க்க அவர் அந்த கூட்டத்தை பார்த்து சொன்னாராம் “நல்லகாலம்! இயக்கம் தொடங்கின காலத்தில இப்படியான கூட்டம் ஒண்டும் வைக்கவில்லை. அப்படி வைச்சிருந்தா இண்டைவரைக்கும் இயக்கத்துக்கு என்ன பெயர் வைக்கிறது எண்டு தான் பேசிக்கொண்டு இருந்திருப்போம் வேற ஒண்டும் நடந்திருக்காது” என்று. இப்படி சொல்லிவிட்டு கூட்டத்தை விட்டு எழும்பி போய்விட்டார் என்று கம்பவாரிதி ஐயா அவரது நினைவுப்பகிர்வு நூல் ஒன்றில் சொல்லி இருந்தார். எனக்கு இப்போது அந்த சம்பவம் தான் ஞாபகம் வருகிறது.
வரலாறு முழுக்க இந்த கும்பல் இருந்து கொண்டே தான் இருக்கிறது. ஆனால் அவர்கள் சராசரிகள் என்பதாலே வரலாற்றில் குரலற்றவர்கள். சென்ற நூற்றாண்டுவரை உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே தான். ஆனால் இந்த சராசரிகளுக்கு இன்று சமூக வலைத்தளம் பெரும் பலத்தை கொடுக்கிறது. அவர்கள் பெரும் திரளாக ஒன்றிணைகிறார்கள். இன்று இருப்பது போல் கலை இலக்கியத்தின் மீதும் இத்தனை ஒருங்கிணைந்த தாக்குதல் வரலாற்றில் எப்போதும் நடந்திருக்காது.
நான் மீண்டும் சொல்கிறேன் பலர் நினைப்பது போல பொன்னியின் செல்வன் ஒரு வெறும் பொழுதுபோக்கு படம் அல்ல. மிக விரிவான அழகியல் கூறுகள் கொண்ட ஒரு கலைச் சாதனை. தமிழ் சினிமாவின் ஒரு பாச்சல் என்றே சொல்லலாம். இதை தங்கள் அரசியலால், அதிமேதாவிதனத்தால், பிழைபுரிதல்களால் புறக்கணிப்பவர்கள் காழ்ப்பை கொட்டுபவர்கள் எல்லோரும் காலத்துக்கு முன் வெறும் சருகுகள் ஆனால் இந்தப் படம் காலம் தாண்டி நிற்கும்.
No comments:
Post a Comment