ஜே ஜே படத்தில் ஒரு காட்சி வரும். மரபில் தோய்ந்த ஒரு மனம் சாதாரண வாழ்க்கையில் அடையும் இன்பங்கள் என்ன என்று நண்பர்கள் கேட்கும் போது நான் அடிக்கடி இந்தக் காட்சியைத் தான் உதாரணம் சொல்லுவேன். படத்தில் மாதவன் தான் காதலித்த பெண்ணை விட்டு வேறு ஒருவரைத் திருமணம் முடிக்க வேண்டிவரும். திருமணத்துக்குச் சம்மதம் தெரிவித்து விட்டு கவலையுடன் சென்றமர்ந்து அந்தப் பெண்ணை முதல் கண்டவுடன் வயலினில் அவர் வாசித்த இசையை இறுதியாக மீண்டும் வாசித்து விட்டு அழுதபடி வயலினைப் போட்டு உடைப்பார்.
இந்த காட்சியைச் சாதாரணமாக எந்த ஒரு மரபுப் பயிற்சியும் இல்லாத ஒரு பார்வையாளன் கவலையுடன் கடந்து போவான். மரபுப் பயிற்சி இல்லாவிட்டாலும் கொஞ்சம் நுண்ணுணர்வு உள்ள பார்வையாளன் என்றால் இதில் உள்ள “என் வாழ்க்கையில் இனி அவள் இல்லை எனவே எந்த இனிமையும் இல்லை” என்று குறிப்புணர்த்தும் காட்சி அமைப்பின் கவித்துவத்தைக் காண்பான்.
ஆனால் நுண்ணுணர்வோடு உங்களுக்கு மரபுப் பயிற்சியும் இருந்தால் இந்த காட்சியில் நீங்கள் அடையும் வேறு உச்சம் ஒன்றுண்டு. இந்து தொன்ம கதைகளில் கிருஷ்ணனும் ராதையும் காதலர்கள். கிருஷ்ணர் கம்சனை வென்று பிருந்தாவனத்திலிருந்து மதுரா நகருக்குச் சென்ற போது ராதையை அவர் பெற்றோர் வேறு ஒருவருக்கு மணமுடித்து விடுவார்கள். ராதை கிருஷ்ணனை நினைத்து ஏங்கி உடல் மெலிந்து இறக்கும் தறுவாயில் அவள் விருப்பத்துக்கு இணங்க அவள் அருகே அமர்ந்து கிருஷ்ணர் புல்லாங்குழல் வாசிப்பார். அதைக் கேட்டபடி ராதை உயிர் பிரியும். கிருஷ்ணர் உடனே அவர்களது காதலின் அடையாளமாக இருந்த புல்லாங்குழலை உடைத்து எறிவார். அதன் பிறகு கிருஷ்ணர் ஒருபோதும் குழலை வாசிக்கவில்லை என்று இரண்டாயிரம் வருடத்துக்கு முற்பட்ட பாகவத புராணம் கூறுகிறது.
அந்த தொன்மக் கதை உங்களுக்குத் தெரிந்தால் உடனே இந்தக் கவித்துவமான காட்சி வேறு கனம் கொண்டுவிடுகிறது. இந்தக் காட்சி ஈராயிரம் ஆண்டுகால பொருள் ஏற்றப்பட்ட ஒன்றாகிவிடுகிறது. ஒரு பெருமரபின் அறுபடா நீட்சியென சென்றமைகிறது. உங்கள் ஆழ்மனதுக்குள் உள்ள அந்த இணைப்பை நீங்கள் கண்டடையும் கணத்தில் நீங்கள் உணரும் ஒரு பரவசத்தை, ஒரு மின்னதிர்ச்சியை அதை ஒருபோதும் உணராத ஒருவருக்கு என்றும் சொல்லி விளக்கிவிடமுடியாது. அன்று முழுவதும் மனம் இனம்புரியா இன்பத்தில் கொந்தளித்துக் கொண்டே இருக்கும்.
நம் வாழ்க்கை என்பது சாதாரண நிகழ்வுகளால் ஆனது. நம் அன்றாடத்தில் பெரிதாக ஒன்று நடப்பதில்லை. எனவே பெரும்பாலான நாள்கள் பரவசம் அற்றதாகச் சலிப்பூட்டும் ஒன்றாகவே இருக்கும். நீங்கள் இன்பத்துக்காக வேறு ஏதும் ஒன்றை நாடவேண்டி இருக்கும். அவையும் அனுபவிக்க அனுபவிக்கச் சலிப்பூட்டும், வெறுமையைக் கொண்டு வரும் உலகியல் இன்பங்களாய் இருக்கும். நீங்கள் மீண்டும் மீண்டும் அந்த இன்பங்களில் மூழ்கி எதார்த்தத்தை மறக்க முயல்வீர்கள். அப்படி உலகியல் இன்பங்களில் மூழ்கி நிறைவுற்றவர்கள் யாருமில்லை. ஆனால் உங்களுக்கு எந்தளவு மரபில் பயிற்சி இருக்கிறதோ அந்த அளவுக்கு அன்றாட அழகு உங்கள் கண்ணில் பட்டுக்கொண்டே இருக்கும். ஒரு சிறிய சாதாரண அனுபவம் மரபு பயிற்சி இருக்கும் போது சட்டெனப் பெரிதாகும்.
என் வாழ்வில் நடந்த இன்னும் ஒரு உதாரணத்தைச் சொல்கிறேன். நானும் நண்பர்களும் யானைகள் சரணாலயத்துக்குச் சென்றிருந்தோம். ஒரு சிறு யானை குட்டி ஒன்று நின்று கொண்டிருந்தது. மரபுப் பயிற்சி இல்லாத நண்பர்கள் கொஞ்ச நேரம் அதைப் பார்த்தார்கள். பார்த்து எவ்வளவு அழகாக இருக்கிறது என்று சொல்லிக்கொண்டார்கள் அவ்வளவுதான் செல்வோம் என்று சென்றுவிட்டார்கள். எனக்கோ அந்த குட்டியைப் பார்த்ததும் உடனே ஒரு பரவசம். ஒரு மின்னல் அடித்துவிட்டது.
சங்க இலக்கியத்தில் குறுந்தொகை பாடல் ஒன்றில் யானைக் குட்டியை “கயந்தலைக் குழவி” என்று சொல்வார்கள். யானைக் குட்டியை எப்போதாவது நேரில் பார்த்தவர்களுக்குத் தெரியும் அதன் தலை உடலை விடச் சற்றுப் பெரிதாக இருக்கும் அந்தத் தலையில் மனிதர்களைப் போல் நல்ல முடி இருக்கும். அதனால் தான் அதைக் கயந்தலைக் குழவி என்கிறார்கள். அந்த சங்கக் கவிதையில் சொல்லப்பட்ட யானைக்குட்டியின் குறும்பும் அழகும் இந்தக் குட்டி மீது ஏறிவிட்டது. ஒரு சாதாரண யானைக் குட்டியின் அழகு மரபுப் பயிற்சி இருக்கும் போது சட்டெனப் பெரிதாகிவிட்டது. நண்பர்கள் அந்த காட்சியை எளிதில் கடந்து சலித்து அடுத்தது என்ன இருக்கிறது பார்க்க என்று தேடிக்கொண்டிருந்தார்கள். எனக்கு அன்று முழுவதும் “கயந்தலைக் குழவி” என்ற சொல்லும் பரவசமும் மனதிலிருந்துகொண்டே இருந்தது.
நான் என் நண்பர்களிடம் தமிழ் மற்றும் இந்து மரபைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள் என்று சொல்வது தமிழை, தமிழ்ப் பண்பாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்பதுக்காக எல்லாம் இல்லை. தமிழை அப்படி எவரும் காப்பாற்ற வேண்டியதில்லை. தமிழ்ப் பண்பாடு அன்றும் சரி இன்றும் சரி எண்ணிக்கையால் அல்ல வெறும் ஐந்நூறு அல்லது ஆயிரம் பேர் கொண்ட குறுங்குழுவின் தீவிரத்தால் தான் தலைமுறை தலைமுறையாக முன் கொண்டு செல்லப்படுகிறது. மரபு என்பது நம்முடைய அழகுணர்வைத் தொடர்ந்து திரட்டி தரக்கூடிய ஒரு பெரும் தொடர்ச்சி. அதைப் பயிலாதவர்களுக்கு அனுபவிக்க அனுபவிக்கச் சலிப்பூட்டும் உலகியல் இன்பம் மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது. அதை விட மேலான ஒரு இன்பத்தையும் நிறைவையும் என்றும் நீங்கள் அறியமாட்டீர்கள். அதனால் தான் நான் உங்கள் மரபை அறிந்து கொள்ளுங்கள் என்று மீண்டும் மீண்டும் நண்பர்களிடம் சொல்லிக்கொண்டே இருக்கிறேன்.