Thursday, 31 October 2024

கொட்டுக்காளி

கொட்டுக்காளி படம் சங்க இலக்கியம் தெரிந்தவர்களுக்கு மிக அணுக்கமாக இருக்கும். காதலில் இருக்கும் பெண்ணில் அணங்கு கூடிவிட்டதாக சங்க இலக்கியத்தில் பெண் வீட்டார் நினைப்பர். அதை "முருகயர்தல்" என்று குறிப்பிடுவர். வெறியாட்டு நடத்தினால் பெண் நலம் பெறுவாள் என்பது தொல் நம்பிக்கை. மொத்த படமும் "வேம்பற்றூர்க் கண்ணன் கூத்தனார்" எழுதிய குறுந்தொகை பாடலை நினைவுறுத்துகிறது.

முருகு அயர்ந்து வந்த முதுவாய் வேல!
சினவல் ஓம்புமதி; வினவுவது உடையேன்.
பல்வேறு உருவின் சில் அவிழ் மடையொடு,
சிறுமறி கொன்று இவள் நறுநுதல் நீவி,
வணங்கினை கொடுத்தியாயின், அணங்கிய
விண்தோய் மாமலைச் சிலம்பன்
ஒண்தார் அகலமும் உண்ணுமோ பலியே!
- குறுந்தொகை - 362. தோழி கூற்று
பொருள் - முருகனுக்கு வெறியாட்டு நடத்தும் அறிவு மிகுந்த வேலனே, கோபம் கொள்வதைத் தவிர்ப்பாயாக. உன்னை ஒன்று கேட்க விரும்புகிறேன். பல நிறங்களையுடைய, சிலவகையான சோற்றையுடைய பலியோடு, சிறிய ஆட்டுக்குட்டியைக் கொன்று, இத்தலைவியினது மணமுள்ள நெற்றியைத் தடவி, முருகக் கடவுளை வணங்கிப் பலியாகக் கொடுப்பாயானால், இவளைத் துன்புறுத்திய, வானத்தை அளாவிய பெரிய மலைப்பக்கத்தையுடைய தலைவனது, ஒளிபொருந்திய மாலையை அணிந்த மார்பும், நீ கொடுக்கும் பலியை உண்ணுமோ?